காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருவேறு இடங்களில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதில் 7 தீவிரவாதிகள், 1படையினர் ஆகிய 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு- காஷ்மீரின் எல்லை மாவட்டமான குப்வாராவில் கோஜூல் என்ற இடத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதையடுத்து அப்பகுதியை முற்றிலுமாகச் சுற்றி வளைத்த படையினர் தீவிரவாதிகளுடன் மோதி வருகின்றனர்.
கண்டேர்பால்- பந்திபோரா மலைப் பகுதிகளில் நடந்த மோதல் நேற்றிரவு முடிவிற்கு வந்துள்ளதாகவும், புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஷாகாபாத், அவந்திபோரா ஆகிய இரண்டு இடங்களில் தொடர்ந்து மோதல் நடந்த வருவதாகவும் ராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கலோனல் எஸ்.டி.கோஸ்வாமி தெரிவித்தார்.
இந்த மோதல்களில் 7 தீவிரவாதிகள், 1 படையினர் ஆகிய 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.