மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவிற்குத் தடை விதிக்கக் கோரி ஐ.டி.சி, இந்திய ஹோட்டல்கள் கூட்டமைப்பு ஆகியவை உட்பட 4 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதி பி.என்.அகர்வால், மத்திய அரசின் உத்தரவிற்குத் தடை விதிக்க முடியாது என்றார்.
"இது ஏற்றுக்கொள்ளத்தக்க கோரிக்கை அல்ல. பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவிற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறேன்." என்றார்.
இந்த வழக்கில், புகைப் பிடிக்கத் தடை விதிக்கும் உத்தரவைத் திட்டமிட்டபடி அக்டோபர் 2 முதல் நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு விடுத்திருந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.