ஒரிசாவில் கந்தாமல் மாவட்டத்தில் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கியுள்ள தற்காலிக முகாம் அருகில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
நெளகான், மஹாசிங்கி, பலிகுடா ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 7,8,9 ஆகிய மணிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாகவும், அவை குறைந்தளவே சக்தி கொண்ட நாட்டு வெடிகுண்டுகளாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
நெளகானில் உள்ள நிவாரண முகாமில் முதல் குண்டு வெடித்துள்ளது. இந்தச் சத்தம் கேட்டதும் அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். இதையடுத்துத் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவலர்கள் வேறு ஏதாவது குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று தேடினர்.
அப்போது, மஹாசிங்கி, பலிகுடா ஆகிய இரண்டு இடங்களிலும் குண்டுகள் வெடித்துள்ளன.
இதுபற்றிய விசாரணையில் மூன்று இடங்களில் வெடித்ததும் ஒரே வகையைச் சேர்ந்த நாட்டு வெடிகுண்டுகளாக இருக்கலாம் என்று கருதுவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குண்டு வெடிப்புகளில் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.