புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுக்கள் உண்மையானவையா என்று விசாரிப்பதற்கு காவல் துறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
காஷியாபாத்தைச் சேர்ந்தவர் லலிதா குமார். நிலத் தகராறு ஒன்றில் இவரது பெண் குழந்தையைச் சமூக விரோதிகள் சிலர் கடத்திச் சென்றனர். இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் லலிதா புகார் அளித்தார்.
அதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள காவல் நிலைய அதிகாரி லோனி, சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளுடன் சேர்ந்து லலிதாவிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். மேலும், புகாரை வாபஸ் பெறுவதுடன், நிலத் தகராறையும் இத்துடன் முடித்துக்கொள்ளுமாறும் லலிதாவை அவர் மிரட்டியுள்ளார்.
இதை எதிர்த்து லலிதா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோர் கொண்ட இருவர் அமர்வு, வெளிப்படையாகத் தெரியும் குற்றங்களில் காவல் துறையினர் உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என்றும் மற்ற புகார்களைப் பொறுத்தவரை அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுக்கள் உண்மைதானா என்பதை விசாரித்து அறிந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியது.
இருந்தாலும், விசாரிப்பதற்கு தரப்படும் அவகாசத்தை குற்றவாளிகளுடன் கை கோர்த்துக்கொள்வது உள்ளிட்ட தவறான நோக்கங்களுக்குச் சில காவலர்கள் பயன்படுத்தக் கூடும் என்று கருதப்பட்டதால், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தக்க ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுக்கும் காவலர்களைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெ.எம். பஞ்சால் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுக்கள் உண்மையானவையா என்று விசாரிப்பதற்கு காவல் துறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 16 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
முன்னதாக, இந்த வழக்கில் எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களும் மத்திய உள்துறைச் செயலரும் தங்களின் பதில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானவை, அப்பாவிகளை தண்டனையில் இருந்து காப்பாற்றும் வகையில், குற்றச்சாற்றுக்களை உறுதி செய்யக் காவலர்களுக்கு அவகாசம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.