ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இன்று பேருந்து ஒன்று பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 2 காவல் துறையினர் உள்பட 7 பேர் பலியானார்கள். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
தோடாவில் இருந்து ஜம்மு நோக்கி பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வலியால் துடித்த அவர் பேருந்தை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டார்.
இதனால் தறிகெட்டு ஓடிய பேருந்து சாலையில் இருந்து விலகி அருகிலுள்ள 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர், ராணுவம் மற்றும் அப்பகுதி மக்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.