ஒரிசாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி வீட்டை இழந்த கர்ப்பிணி ஒருவர் தண்ணீருக்கு நடுவில் படகில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயும் சேயும் நலமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரிசாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கேந்திராபராவும் ஒன்று. இங்குள்ள பெட்டெரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரீட்டா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற கர்ப்பிணிப் பெண்ணின் வீடு வெள்ளத்தால் சூழப்பட்டது.
இதையடுத்து அங்கு வசிப்பவர்கள் அனைவரும் கடந்த 24 ஆம் தேதி மாலை படகு மூலம் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது ரீட்டாவிற்கு பிரசவ வேதனை துவங்கியது. தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டு, மின்சாரம் தடைப்பட்டு வெளியுலகுடன் தொடர்புகொள்ளத்தக்க எல்லா வழிகளும் தடைப்பட்டுவிட்ட காரணத்தால் ரீட்டாவின் குடும்பத்தினர் இரவு முழுவதும் தண்ணீரில் தவித்தபடி ரீட்டாவை கவனித்துக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக மறுநாள் காலை வேறு சில படகுகளில் அந்த வழியாக வந்த ஆஷா தொண்டு நிறுவன ஊழியர்களும், உள்ளூர்ப் பெண்கள் சிலரும் சேர்ந்து ரீட்டாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், வழியிலேயே ரீட்டாவிற்கு அழகான குழந்தை பிறந்தது.
இதையடுத்துக் குழந்தையும் தாயும் அருகில் உள்ள சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு இருவரின் உடல்நலமும் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ரீட்டாவுடன் சேர்த்து ஒரிசாவில் வெள்ளத்திற்கு நடுவில் தண்ணீரில் தத்தளித்தபடி குழந்தை பெற்றெடுத்த பெண்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.