தொடர் குண்டு வெடிப்புகள் நடந்து இரண்டு வாரங்கள் கூட முடியாத நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று மீண்டும் நடந்துள்ள குண்டு வெடிப்பில் சிறுவன் ஒருவன் பலியானதுடன் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் புகழ்பெற்ற குதுப்மினார் கோபுரத்திற்கு அருகில் மெஹ்ராலி என்ற மலர்ச் சந்தை உள்ளது. மக்கள் நெருக்கடி மிகுந்த இப்பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பொருள் விற்பனைக் கடைக்கு முன்பு இன்று மதியம் 2.15 மணியளவில், கறுப்பு நிற மோட்டார் சைக்கிளில் கறுப்பு நிற உடையணிந்து தலையில் ஹெல்மெட்டுடன் வந்த இரண்டு நபர்கள், பிளாஸ்டிக் கவரில் இருந்த டிபன் பாக்ஸ் ஒன்றை விட்டுச் சென்றுள்ளனர்.
இதைப் பார்த்த 13 வயதே ஆன சிறுவன் ஒருவன் அந்த டிபன் பாக்சை எடுத்துச் சென்று மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளான். ஆனால், அதை வாங்க மறுத்த அந்த நபர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
அப்போது அந்த டிபன் பாக்ஸ் திடீரென்று வெடித்துச் சிதறியதில், அதை வைத்திருந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியானான். அந்த வழியாக நடந்து சென்ற 29 பேர் வெடிகுண்டுச் சிதறல் பட்டுக் காயமடைந்தனர் என்று டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையர் ஹெச்.எஸ்.தாலிவால் கூறினார்.
படுகாயமடைந்த 11 பேர் உடனடியாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக உள்துறைச் செயலர் மதுக்கர் குப்தா கூறினார்.
தலைநகர் டெல்லியில் கடந்த 13 ஆம் தேதி அடுத்தடுத்து 5 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 24 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கூட முடியாத நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.