ஒரு கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க முடியும், ஆனால் அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வழிமுறைகள் அந்தச் சட்டத்திற்குள்ளேயே அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நடந்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் விழாவிற்குத் தலைமையேற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
நமது நாட்டிற்கு எந்த மாதிரியான சட்டங்கள் வேண்டும் என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அந்தச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஒரு கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க முடியும். ஆனால் அத்தகைய சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் அந்தச் சட்டத்திற்குள்ளேயே அமைக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை படிப்படியாக அமல்படுத்தும் நடவடிக்கையின்போது மனித உரிமைகள் மீறப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் வரையறைகள் அற்ற ஒரு தனிப்பட்ட புலனாய்வு அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவது முறைகேட்டைத் தடுக்க உதவும்.
மத்தியப் புலனாய்வுக் கழகம் ஒருபுறம் இருந்தாலும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட தனிப்பட்ட புலனாய்வு அமைக்கப்படுவதும் அவசியம். இவ்வாறு நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.