இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அடுத்த வாரம் கிடைத்துவிடும் என்று கருதப்படும் நிலையில் அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் அக்டோபர் 3இல் இந்தியா வரவுள்ளார்.
அவரது ஒரு நாள் பயணத்தின்போது அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டில் இரு தரப்பிலும் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் கடந்த ஓராண்டிற்கு முன்பு இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலால் அவரது பயணம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்ப்புகளை மீறி அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்து உள்ளது. இந்த உடன்பாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அடுத்த வாரம் கிடைத்து விடும் என்று கருதப்படுகிறது.
அதன்பிறகு அக்டோபர் 3இல் இந்தியா வரும் காண்டலிசா ரைஸ் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்துப் பேசுகிறார்.
இந்தச் சந்திப்பில் அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நாளை நான்கு நாள் பயணமாக அமெரிக்க செல்லவுள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது அயல் நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து அணு சக்தி உடன்பாடு குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.