ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினரின் சூட்டாதரவுடன் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை நமது பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர் என்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஜம்முவில் பர்க்வால் துணை வட்டத்தில் சர்வதேச எல்லைக் கோட்டிற்கு அருகில் உள்ள நமது படையினரின் கண்காணிப்பு மையத்தின் மீது பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.
இதையடுத்து நமது பாதுகாப்புப் படையினரும் சுற்றுக்காவல் படையினரும் இணைந்து தீவிரவாதிகளின் மீதும் பாகிஸ்தான் படையிரின் மீதும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் நமது படையினரின் மீது கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர்.
இரு தரப்பிற்கும் இடையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான சண்டை நடந்ததாகவும், நமது எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளின் மீது மோர்ட்டார் குண்டுகளையும் வீசினர் என்றும் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறுதியில் தீவிரவாதிகள் தங்களின் ஊடுருவல் முயற்சியைக் கைவிட்டுவிட்டு பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பியோடினர். இந்த மோதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாகிஸ்தான் படையினரின் சூட்டாதரவுடன் கனாசக் பகுதியில் பாதுகாப்பு வேலியைத் துண்டித்து ஜம்முவிற்குள் மூன்று தீவிரவாதிகள் ஊடுருவினர் என்பதும், பின்னர் சின்னூர் பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் பொது மக்கள் 5 பேரும், படையினர் இரண்டு பேரும் பலியாகினர்.