Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயங்கரவாதத்தில் இளைஞர்கள்: கலாம் கவலை!

பயங்கரவாதத்தில் இளைஞர்கள்: கலாம் கவலை!
, சனி, 27 செப்டம்பர் 2008 (13:06 IST)
நாட்டை உலுக்கி வரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் படிப்பறிவுள்ள இளைஞர்கள் ஈடுபட்டுள்ளது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், சமூகநலனை வலியுறுத்தக் கூடிய கல்விமுறையை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

PIB PhotoFILE
அலகாபாத்தில் நேற்று மாலை நடந்த தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற கலாம் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பொறியியல் மற்றும் இதர தொழிற்படிப்புகளை முடித்த இளைஞர்களே அதிகளவில் பயங்கரவாத செயல்கள், இதர குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு மாணவர் கலாமிடம் கேள்வி எழுப்பினார்.

இளைஞர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது கவலைகுரிய விஷயமாகும். அறிவையும், திறமையையும் மட்டுமே அளிக்கும் நமது தற்போதைய கல்வி முறையே இதற்குக் காரணம். எனவே, பிற அறிவியல் பாடங்களை விட சமூகநலனை வலியுறுத்தும் சமூக அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கலாம் பதிலளித்தார்.

மதத்தையும், தெய்வீகத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசிய கலாம், மதம் என்பதில் வேதவேதாந்த சாஸ்திரம், தெய்வீகம் என இரு பிரிவுகள் இருப்பதாகவும், இதில் வேதவேதாந்த சாஸ்திரம் தனிப்பட்ட எண்ணங்களை கொண்டிருக்கும், பன்முக சிந்தனை கொண்டு மக்களுடன் தொடர்பற்ற நிலையை ஏற்படுத்தும்.

ஆனால் தெய்வீகம் என்பது அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒருமித்த தன்மை உடையது. எனவே சமூகத்தில் அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டுமென்றால் இளைஞர்களை தெய்வீகப் பாதைக்கு வழிநடத்த வேண்டும் என யோசனை தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் பதவியில் தாம் இருந்த போது, பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது, ஆதாயம் தரும் பதவி ஆகியவையே தனக்கு கடும் பிரச்சனையை ஏற்படுத்தியதாக தெரிவித்த அப்துல்கலாம், இவற்றைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தாம் பதவியில் இருந்த காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்ததாக குறிப்பிட்டார்.

எனவே, ஒருவர் தாம் வகிக்கும் பதவியின் மீது காதல் கொண்டால் அதனை மகிழ்ச்சியுடன் செய்ய முடியும் என்றும் கலாம் மாணவர்களுக்கு ஆலோசனை கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil