இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை 123 ஒப்பந்தம் மட்டுமே கட்டுப்படுத்தும். சர்வதேசக் கொள்கைகள் தவிர எந்தவொரு நாட்டினுடைய தனிப்பட்ட உள்நாட்டுச் சட்டங்களும் இந்த உடன்பாட்டைக் கட்டுப்படுத்தாது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
வாரணாசியில் அயலுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜியிடம் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாடு பற்றிக் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
நாம் ஒரு இறையாண்மை உடைய நாடு என்ற முறையில் மற்றொரு இறையாண்மை உடைய நாடான அமெரிக்காவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை மேற்கொண்டுள்ளோம்.
இந்த உடன்பாடு 123 ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், நாம் ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச அளவிலான அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான உடன்படிக்கைகள் ஆகியவற்றால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும். சர்வதேச அளவிலான அணு அயுதப் பரவல் தடை தொடர்பான உடன்படிக்கைகளை நிர்வகிக்கும் வியன்னாவில் உள்ள பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பு விதிமுறைகளுக்கும் இந்த உடன்பாடு கட்டுப்படும்.
இவை தவிர எந்த நாட்டின் தனிப்பட்ட உள்நாட்டுச் சட்டங்களும் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டைக் கட்டுப்படுத்தாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டங்களை (ஹைட் சட்டம்) இந்தியா மீறினால் அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாடு முறிந்துவிடும் என்று செய்திகள் வெளியானது பற்றிக் கேட்டதற்கு, "அமெரிக்காவோ அல்லது வெறு எந்த நாடாக இருந்தாலும் அதன் தனிப்பட்ட முடிவெடுக்கும் விவகாரத்திலும் நாம் தலையிடுவதையும், நமது தனிப்பட்ட முடிவெடுக்கும் விவகாரத்தில் பிற நாடு தலையிடுவதையும் நான் விரும்பவில்லை" என்றார் பிரணாப் முகர்ஜி.