தற்போது தயாரிப்பிலுள்ள அதிநவீன ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தொடர்ந்து புதிதாக ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
நமது கடற்படையிடம் ரஷ்யாவின் கிலோ (KILO), ஜெர்மனியின் எச்.டி.டபிள்யூ சிசுமார் வகைகள் உட்பட 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இந்த நிலையில் மேலும் 30 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கித் தனது படைப் பலத்தைப் பெருக்கிக்கொள்ள நமது கடற்படை திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக டீசல், மின்சாரத்தில் இயங்கும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை அயல்நாடுகளிடமிருந்து வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தாலி, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த உலகளவில் புகழ்பெற்ற நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தகவல் கோரப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் உலகளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரவோ அல்லது பரிந்துரைகளை அனுப்புமாறு கோரவோ அடுத்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது மும்பையில் உள்ள பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான மாசாகன் டாக்யார்ட்ஸ் நிறுவனம் மூலம் ஆறு அதிநவீன ஸ்கார்ப்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை கடற்படையில் சேர்க்கப்பட்ட பிறகு அயல்நாடுகளில் இருந்து வாங்கப்படும் நீர்மூழ்கிகள் கடற்படையில் சேர்க்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.