சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் தனது பணியை தொடங்க வேண்டும் என்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவுக்கு, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில அரசு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் ரூ.1 லட்சம் 'நானோ' கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைத்துள்ளது. இந்த தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட சுமார் 400 ஏக்கர் நிலத்தை திருப்பியளிக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
இதனால் டாடா மோட்டார்ஸ் தனது நானோ கார் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களும் டாடா தொழிற்சாலையை தங்கள் மாநிலத்தில் அமைக்க வேண்டும் என்று கேட்டு வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கார் தொழிற்சாலை அமைப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகள், ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும், மேலும் நிறுத்தி வைக்கப்பட்ட தொழிற்சாலைப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் நிருபம் சென் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிங்கூர் மற்றும் மேற்கு வங்க மாநில மக்கள் டாடா தொழிற்சாலை தங்கள் மாநிலத்தில் அமைய வேண்டும் என்று விரும்புவதாக சென் தெரிவித்துள்ளார்.
டாடா தொழிற்சாலை வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுமா என்று கேட்டதற்கு, டாடா நிறுவனம் அது போன்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை என்றும் மாநில அரசு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து தரும் என்றும் கூறினார்.
மாநிலத்தில் உள்ள சில மக்கள் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள் ஆனால் அது அனைத்து மக்களின் குரல்கள் இல்லை என்று டாடா நிறுவனத்திடம் எடுத்துக் கூற நாங்கள் விரும்புகிறோம் என்றும் நிருபம் சென் கூறினார்.