ஒரிசாவில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் புதிதாக இரண்டு மாவட்டங்களுக்குப் பரவியதைத் தொடர்ந்து, மேலும் 42 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரிசாவின் முக்கிய நதியான மகாநதி மற்றும் அதன் கிளை நதிகளில் சுமார் 240 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இதுவரை பாதுகாப்பாக இருந்த நெளபாடா, பூரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 42 லட்சம் பேர் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி மேடான பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். கேந்திரபாரா, கட்டாக், ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள், தற்காலிக கூடாரங்கள் ஆகியவற்றை வழங்கும் பணிகள் ராணுவத்தின் முப்படைகளின் உதவியுடன் துரிதமாக நடந்து வருகிறது.
வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்பையும் கணக்கிடும் பணிகள் இன்றும் 15 நாட்களுக்குள் முடிந்துவிடும் என்று ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள வேளாண் நிலங்களின் பரப்பளவு 5 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.