நமது நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது பற்றிக் கவலை தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதுடன், பயங்கரவாத தடுப்புச் சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வைத்துப் பேசிய எல்.கே. அத்வானி, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதால் அவருக்கு மீண்டும் வாக்களிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
தலைநகர் டெல்லி, அகமதாபாத் உள்பட முக்கிய நகரங்களில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த அத்வானி, பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தை தாமதிக்காமல் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், பயங்கரவாத தடுப்பு சட்டங்களை மத்திய அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றார்.
இதற்கிடையில், செப்டம்பர் 29ல் ஷில்லாங் செல்லும் அத்வானியை கொல்லப்போவதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு மிரட்டல் விடுத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க., மிரட்டலுக்கு பயந்து அத்வானி ஷில்லாங் பயணத்தை கைவிட மாட்டார் என கூறியுள்ளது.