முற்றிலும் இந்தியத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா உளவு விமானம் (லக்ஷயா), புதிய இயந்திரத் தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட பிறகு இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஒரிசா மாநிலம் சண்டிபூர் அருகில் பாலாசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில்(ITR) இருந்து இன்று பிற்பகல் 12.15 மணியளவில் லக்ஷயா விமானம் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
எதிரி நாட்டு வான் பரப்பில் நுழைந்து உளவு பார்த்து, வீடியோ படங்களை எடுத்து நேரடியாக ஒளிபரப்புசெய்துவிட்டு, திரும்பி வரும் திறன் கொண்டது இந்த லக்ஷயா விமானம்.
பெங்களூருவில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ்மெண்ட் (ADE), நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது.
லக்ஷயா விமானம் இந்திய விமானப் படையில் கடந்த 2,000ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த விமானம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்த விமானத்தின் இயந்திரத்தின் நிலைத் திறனும், பயணிக்கும் வேகமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.