ஒரிசாவில் மீண்டும் இரண்டு தேவாலயங்கள் மீதும், கிறித்தவர்களின் வீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பதற்றம் நிறைந்த கந்தமால் மாவட்டத்தில் உள்ள தரிங்கிபாடி, உதயகிரி, திகாபலி ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு தேவாலயங்கள், 100 க்கும் மேற்பட்ட கிறித்தவர்களின் வீடுகள் ஆகியவை நேற்றிரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்ததை அடுத்து உடனடியாக காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய ரிசர்வ் காவல் படை, அதிவிரைவுக் காவல் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
கலவரத்தால் 42 முக்கியச் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், இதனால் குறிப்பிட்ட இடங்களுக்குப் பாதுகாப்புப் படையினர் சென்று சேர்வதில் சிக்கல் எழுந்ததாகவும் கந்தமால் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் குமார் தெரிவித்தார்.