இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் ஓடும் ஆற்று நீரைப் பங்கிட்டுக்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள சிந்து நதி நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் என்று பாகிஸ்தானிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் நடந்து வரும் ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியும் முதல்முறையாகச் சந்தித்து, பயங்கரவாதம், நீர்ப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகப் பேசினர்.
அப்போது, "ஆற்று நீரைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள சிந்து நதி நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கையை முழுமையாக அமல்படுத்துவதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பான நிலவரம் குறித்து ஆராய சிந்து நதி நீர் ஆணையரை நாங்கள் வரவேற்கிறோம்." என்று மன்மோகன் சிங் கூறினார் என்று அசோசியேட்டட் பிரஸ் ஆஃப் பாகிஸ்தான் தெரிவிக்கிறது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் நீர்ப் பங்கீடு தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள சிந்து நதி நீர்ப் பங்கீடு உடன்படிக்கை 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி கராச்சியில் கையெழுத்திடப்பட்டது.
மேற்கிலிருந்து ஓடும் நதிகளான சிந்து, ஜீலம், சேனாப் மற்றும் கிழக்கிலிருந்து ஓடும் சட்லஜ், பீஸ், ரவி ஆகிய 6 நதிகளை உள்ளடக்கி சிந்து நீர்ப் பங்கீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை உலக வங்கியின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.