பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானிக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கத்தினர் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அத்வானி வரும் 29ஆம் தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்குக்கு செல்கிறார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தீவிரவாதிகள் அனுப்பியுள்ள இ-மெயிலில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தின் வட கிழக்கு பகுதி கமாண்டர் அலி ஹூசைன் பதார் என்பவரது கையெழுத்திடப்பட்டுள்ள அந்த இ-மெயிலில், அத்வானியின் ஹிந்துத்வா கோரிக்கை இந்தியாவை எதேச்சதிகார புழுதிக்குள் தள்ளிவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் டோங்குபார் ராய் அத்வானியின் வருகையையொட்டி அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும், இந்த இ-மெயில் மிரட்டல் குறித்தும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, காவல் துறையினர் இந்த இ-மெயில் வந்த பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று இது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணனை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி நாங்கள் இப்போது எதுவும் கூறமுடியாது என்றும் இ-மெயில் அனுப்பப்பட்ட கணினியின் ஐ.பி. முகவரியை கண்டறிய முயற்சி செய்து வருகிறோம் என்றும் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், முதல் கட்ட விசாரணையில் இந்த இ-மெயில் ஷில்லாங்கில் இருந்து அனுப்பியது தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.