தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஒரு முறை சுடும் சாதாரண துப்பாக்கிகளுக்குப் பதிலாக இந்திய ராணுவ வீரர்களுக்கு விரைவில் லேசர் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகமான லேசர் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் (LASTEC) இந்த லேசர் துப்பாக்கிகளை வடிவமைத்துள்ளது.
தீவிரவாதிகள் எல்லைத் தாண்டி ஊடுருவி வரும் போதும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சண்டையின் போதும் ராணுவ வீரர்கள் இத்தகைய லேசர் துப்பாக்கிகளை பயன்படுத்தும் விதமாக தயார் செய்யப்பட்டுள்ள இத்துப்பாக்கிகள் விரைவில் ராணுவத்துக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இது போன்ற லேசர் துப்பாக்கிகள் தற்போது அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லேசர் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் லேசர் ஒளியானது, தீவிரவாதி மற்றும் சமூக விரோத செயலில் ஈடுபடும் எதிரிகளுடைய கண்களின் பார்வைத் திறனை சுமார் 40 நொடிகளுக்கும் மேலாக குருடாக்கி அவர்களை ஸ்தம்பிக்க செய்து விடும். இதனைத் தொடர்ந்து படையினர் தீவிரவாதிகளை எளிதில் மடக்கிப்பிடித்து விடலாம் என்று லேசர் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய இணை இயக்குனர் ஏ.கே. மயினி தெரிவித்துள்ளார்.
இந்த லேசர் துப்பாக்கிகள் எதிரிகளின் கண்களை நிரந்தரமாக குருடாக்காது என்பதால் இதனைப் பயன்படுத்த எந்தவித தடையும் இல்லை. மேலும் இது முற்றிலும் ஐ.நா. தரக்கட்டுப்பாடு விதிமுறைகளின் படி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.