தலைநகர் டெல்லி, அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 நபர்களை மும்பை குற்றப்பிரிவுக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள இந்த 5 பயங்கரவாதிகளின் பெயர்கள் வருமாறு- அப்துல் அஃப்சல் உஸ்மானி, முகமது சாதிக் ஷேக், முகமது ஆரிஃப் ஷேக், அகமது ஜாகீர் ஷேக், ஷேக் முகமது அன்சாரி.
இவர்கள் 5 பேரும் வட கிழக்கு டிராம்பே பகுதியில் உள்ள சிறுத்தை கூடாரத்தில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், உத்தரப் பிரதேச மாநிலம் அஸாம்காட் என்ற இடத்தைச் சேர்ந்த உஸ்மானி, அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் குண்டுகளை வைத்தவன் ஆவான். மேலும், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை நவி மும்பையில் இருந்து திருடிக் கொடுத்துள்ளான் என்று மும்பை குற்றவியல் காவல்துறை இணை ஆணையர் ராகேஷ் மரியா தெரிவித்தார்.
சாதிக் உள்ளிட்ட மற்ற 4 பேரும் குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களை சேகரித்துக் கொடுத்துள்ளனர். இவர்களிடம் இருந்து 10 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 4 மின்சார இணைப்புகள், சிறிய வகைத் துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் 5 பேருக்கும் லஷ்கர் இ- தயீபா, ஹியூஜி உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளது. கடந்த 2005 முதல் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகளில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றார் காவல்துறை அதிகாரி ராகேஷ் மரியா.