ஸ்ரீநகர்- முசாபராபாத், பூஞ்ச்- ராவல்கோட் ஆகிய இரண்டு பாதைகளும் அக்டோபர் 15 முதல் வர்த்தகத்திற்கு தயாராகிவிடும் என்று ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோரா கூறியுள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வர்த்தகம் செய்ய அனுமதியளிப்பது தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதி அறிவிப்பை வெளியிடவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் போக்குவரத்திற்குத் தேவையான வகையில் ஸ்ரீநகர்- முசாபராபாத் பாதை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பூஞ்ச்- ராவல்கோட் பாதையில் சில அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அரசுப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று மாலை நடந்த உயர் மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா, உரி- முசாபராபாத் பாதை அக்டோபர் 15 முதலும், பூஞ்ச்- ராவல்கோட் பாதை அக்டோபர் இறுதி முதலும் வர்த்தகத்திற்குத் தயாராகிவிடும் என்று தெரிவித்தார்.