ஸ்ரீநகரில் தடையை மீறிப் போராட்டம் நடத்திய பிரிவினைவாதிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர்.
ஜாமியாத்- உல் அஹாலி ஹதீஷ் அமைப்பின் தலைவர் மெளலானா செளகத் அகமதுவின் வீடு மீது நேற்று மாலை நடத்தப்பட்ட கையெறி குண்டு வீச்சைக் கண்டித்து, இன்று மதியம் பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஸ்ரீநகரில் ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ள மைசூமா என்ற இடத்தில் இருந்து புத்சா செளக் என்ற இடம் நோக்கி இன்று மதியம் தடையை மீறி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களுக்கும் அவர்களைத் தடுக்க முயன்ற மத்திய ரிசர்வ் காவலர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.
விடுதலை முழக்கங்களை எழுப்பியபடி கற்களை வீசிய போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக முதலில் தடியடி நடத்திய காவலர்கள், அது பலனளிக்காததால் பின்னர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.