Publish Date: Wed, 24 Sep 2008 (12:29 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (12:27 IST)
அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் மோசடி செய்ததாக நீதிபதிகள் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் நீதிமன்றத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. வைப்பு நிதித் தொகையில் ரூ.7 கோடி வரை கையாடல் நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இந்த மோசடி குறித்து மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காஸியாபாத் வழக்கறிஞர்கள், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கு அனுமதி மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஊழல் புகார் குறித்து விசாரிக்க 16 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது. அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காஸியாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இவ்வழக்கு, நீதிபதிகள் அரிஜித் பசாயத், வி.எஸ்.சிர்புர்கர், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பாலி நாரிமன், கிருஷ்ணமணி ஆகியோர் வாதிட்டனர். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 7 பேர், முன்னாள் நீதிபதிகள் 6 பேர், கீழ் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேர், உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு மோசடியில் தொடர்பு இருப்பதாகக் கூறினர். இந்த புகார் குறித்து சுதந்திரமான புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
விசாரணைக்குப் பின் உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தங்கள் உத்தரவில், வருங்கால வைப்பு நிதி மோசடி குறித்து மத்திய புலனாய்வுக்கழகம் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ம.பு.க. தனது அறிக்கையை 3 மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும், காஸியாபாத் காவல்துறை கண்காணிப்பாளரின் கடிதம் மீது நடவடிக்கை எடுக்காததற்கு உத்தரபிரதேச அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.