நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்த அரசுகளில் மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசே மிகவும் திறனற்ற அரசு என பா.ஜ.க. மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சங்கல்ப யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி, துமாகா பகுதியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த கால ஆட்சியில் இருந்த நரசிம்மராவ் அரசு ஊழல் மிகுந்தது என்றாலும்,
தற்போதைய மன்மோகன் அரசு ஊழல் மிகுந்த அரசு என்பதுடன், நிதி நிர்வாகத்திலும் தவறான பாதையில் சென்றதால் பணவீக்கம் உயர வழி வகுத்துள்ளது என்று அத்வானி குற்றம்சாட்டினார்.
மேலும், சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, மன்மமோகன் சிங் அரசு நாட்டின் பாதுகாப்பிலும் சமரசம் செய்து கொண்டதை பிரதிபலிப்பதாக இருந்ததாக அத்வானி கூறினார்.
சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுதொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வலியுறுத்தலால் மேற்கொள்ளப்பட்டவை என்று பதிலளித்தார்.
நாட்டின் விடுதலை, நலனுக்காக ஏராளமான தியாகிகள் உயிரிழந்துள்ள நிலையில், அரசின் நலத் திட்டங்களுக்கு காந்தி குடும்பத்தினரின் பெயரை மட்டும் வைப்பது தவறானது என்றும் அத்வானி குறிப்பிட்டுள்ளார்.