பரஸ்பர நல்லெண்ண நம்பிக்கையூட்டும் நடவடிக்கையாக, வரும் அக்டோபர் மாதம் முதல் எல்லைப் பகுதி வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதன்படி ஸ்ரீநகர் -முஷாபராபாத், பூஞ்ச் - ராவல்கோட் வழியாக இந்த வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
புதுடெல்லியில் இன்று நடந்த இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் அளவிலான கூட்டத்தில் எல்லைப் பகுதி வர்த்தகத்தை தொடங்குவது, அதில் இடம்பெற வேண்டிய பொருட்கள் ஆகியவை குறித்து கொள்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகக் கூடுதல் செயலாளர் இஜாஸ் அகமது சவுத்ரி, "எல்லை வர்த்தகம் தொடர்பான வழிமுறைகளை நாங்கள் இறுதி செய்துள்ளோம். இது எங்கள் தலைமையிடம் அளிக்கப்படும்" என்றார்.
"ஸ்ரீநகர் -முஷாபராபாத், பூஞ்ச் - ராவல்கோட் வழியாக இந்த வர்த்தகத்தைத் தொடங்கும் வகையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதை எப்போது தொடங்கப்படும் என்பதை இரு அரசுகள் தான் தீர்மானிக்கும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லை வர்த்தகம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஆகியோரின் சந்திப்பின்போது இதுதொடர்பான தேதி அறிவிக்கபடும் என்று தெரிகிறது.
முஷாபராபாத்தில் இருந்து வர்த்தகக் குழு ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவிற்கு விரைவில் வந்து, வர்த்தகத்திற்கு உகந்த பொருட்கள் குறித்து ஆராயும் என்று தெரிகிறது.
கடந்த ஜூலை மாதம் நடந்த இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலர்கள் அளவிலான சந்திப்பின்போது, எல்லை வர்த்தகத்தில் இடம்பெற வேண்டிய பொருட்கள் தொடர்பான பட்டியல் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீநகர் (இந்தியா) - முஷாபராபாத் (பாகிஸ்தான்) இடையே பேருந்துப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையே எல்லை வர்த்தகத்தை தொடங்குவது தொடர்பாக இதுவரை நடந்த பேச்சுகள் தோல்வியில் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.