டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரின் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர், விசாரணைக்காக இன்று மணிப்பால் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த 13 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் இந்தியன் முஜாஹூதீன், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) ஆகியவற்றைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், 5 பேரை கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூர், வாரணாசி, அகமதாபாத், பெங்களூர் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளில், இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கைதாகியுள்ள பயங்கரவாதிகளில் ஒருவர் மணிப்பால் பல்கலைக்கழக மாணவர் எனத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மேல் விசாரணைக்காக அவரை, மணிப்பால் நகருக்கு (உடுப்பி மாவட்டம்) டெல்லி காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணையின் முன்னேற்றம் கருதி, அவரது பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை காவல்துறையினர் வெளியிட மறுத்துவிட்டனர். இதன் மூலம் மேலும் சிலர் பிடிபடுவார்கள் எனத் தெரிகிறது.