பீகார் மாநிலம் கோசி ஆற்றில் நாட்டுப் படகு ஒன்று நடுவழியில் கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கிதர்மஹி கிராமத்தில் இருந்து பிர்புர் கிராமத்துக்கு 23 பேர் ஒரு நாட்டுப் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிக சுமையின் காரணமாகவும், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்ததாலும் அவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்தது.
இதில் படகில் வந்த அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்தனர். இவர்களில் 13 பேர் நீந்தி பாதுகாப்பாக கரையேறினர். மற்றவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து தகவலறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி பலியானவர்களின் உடல்களை தேடி வருகின்றனர்.