அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணமாக இன்று சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், இந்தப் பயணத்தின் போது இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தப் பேச்சுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி விமான நிலையத்தில் சுற்றுப்பயணத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், ஐ.நா உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளை முன்னேற்றத் தேவையான நடவடிகைகளை பெற சர்வதேச சமுதாயத்தின் கவனத்தைப் பெறுவேன் என்றும், சர்வதேச பிரச்சனைகளான உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை, தீவிரவாதம் மற்றும் புத்தாயிரத்தாண்டு வளர்ச்சி இலக்குகளை குறித்து எடுத்துரைப்பேன் என்றும் கூறினார்.
அமெரிக்காவிற்கு வரும் 25ஆம் தேதி செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்தித்து இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதுடன், இருநாட்டு பாதுகாப்பு, வர்த்தக உறவுகள் பற்றியும் பேசுவார் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
இதையடுத்து 26ஆம் தேதி நியூயார்க்கில் நடக்கும் 63வது ஐ.நா பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர், அக்கூட்டத்திற்கு வரும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி மற்றும் சீனாவைச் சேர்ந்த தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.
பின்னர் பிரான்ஸ் செல்லும் பிரதமர், 29ஆம் தேதி மார்சிலி நகரில் நடக்கும் இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டிலும், 30ஆம் தேதி பாரீசில் நடக்கும் இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு மாநாட்டிலும் பங்கேற்றுப் பேசுகிறார்.