கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கோவா மாநிலத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த ரயிலின் ஒரு பெட்டியில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட பெட்டி ஒன்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கேரள காவல் துறையினர், கோவா காவல் துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
எர்ணாகுளத்திலிருந்து நேற்று மாலை 7 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் இன்று காலை 10 மணிக்கு கோவா ரயில் நிலையத்துக்கு வந்து சேரும் என்று கோவா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கோவாவில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பையடுத்து பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு கோவாதான் என்ற தகவல் எதுவும் டெல்லி காவல் துறையினரிடமிருந்து எங்களுக்கு வரவில்லை என்றும் கோவா காவல் துறையினர் கூறியுள்ளனர்.