ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தான் படையினர் கடுமையான தாக்குதலை நடத்தினர்.
"பூஞ்ச் மாவட்டத்தில் சப்ஜியான் பகுதியில் காம்யா சாவடியில் இன்று காலை 10.30 மணியில் இருந்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். முற்பகல் நீண்ட நேரத்திற்கு பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஏராளமான குண்டுகள் இந்திய எல்லைக்குள் வந்து விழுந்துகொண்டிருந்தன" என்று பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது.
பூஞ்ச், ராஜூரி மாவட்ட எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 35 க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.