கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு முதல் மேலும் 4 கிறித்தவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதால் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பெங்களூரு அருகில் உள்ள மரியன்னபால்ய கிராமத்தில் உள்ள தேவாலயத்தின் கதவுகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு நகரத்தில் ராஜராஜேஸ்வரி நகர், பனாஸ்வாடி ஆகிய இடங்களில் உள்ள 2 தேவாலயங்களும், குடகு மாவட்டத்தில் சித்தாபுரா அருகில் நெல்லியாஹூடிகேரி என்ற கிராமத்தில் ஒரு தேவாலயமும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளன.
ராஜராஜேஸ்வரி நகரில் மர்ம நபர்கள் நடத்திய கல்வீச்சில் ஆலயத்தின் கண்ணாடிகள் உடைந்து இரண்டு அடி உயரமுள்ள குழந்தை ஏசு சிலை கீழே விழுந்துள்ளது என்று காவல்துறை கூடுதல் ஆணையர் எம்.ஆர்.புஜார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பனாஸ்வாடியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் தேவாலயத்தின் மீது கற்களை வீசியுள்ளனர். அதைப் பார்த்துப் பொது மக்கள் விரைவதைக் கண்டதும் அவர்கள் தப்பியுள்ளனர் என்றார் அவர்.
நெல்லியாஹூடிகேரியில் உள்ள தேவாலயத்தின் மூன்று கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடத்து வருகிறது.
இதற்கிடையில் மங்களூர், உடுப்பி, சிக்மகளூர் ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகள் நடந்தன.
கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூர், உடுப்பி, கோலார் உள்படச் சில நகரங்களில் கிறித்தவ வழிபாட்டுக் கூடங்களின் மீதும் தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஒரு சில இடங்களில் வன்முறையும் வெடித்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக கர்நாடக மாநில பஜ்ரங் தள அமைப்பாளர் மகேந்திர குமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். கிறித்தவ ஆலயங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தாங்கள்தான் காரணம் என்றும் பஜ்ரங் தளம் சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கிறித்தவ தேவாலயங்கள், வழிபாட்டுக் கூடங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக நீதி விசாரணைக்குக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி பி.கே. சோமசேகரா நீதி விசாரணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு 3 மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.