அரசைக் கண்டித்து ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதி நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் ஜம்முவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத அமைப்புகளின் போராட்டம் விலக்கிக்கொள்ளப் பட்டதால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலை திரும்பியது.
அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்த அரசை கண்டித்து ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதி அமைப்பினர் ஜம்முவில் இரண்டு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் முதல் நாளான இன்று அமைதியாகக் கழிந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு பகுதி முழுவதும் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிதும் பயன்படும் ஷேர் ஆட்டோக்கள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்று விடுமுறை நாள் என்றாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையினர், மாநிலக் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று ஜம்முவில் அபினவ் திரையரங்கம் அருகில், அமர்நாத் கோவிலுக்கு நிலம் வழங்கக் கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டங்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதி அமைப்பினருக்கும் அவர்களை தடுத்த பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்த மோதலில் 10 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் இயல்பு வாழ்க்கை திரும்பியது!
இதற்கிடையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீருக்குச் செல்லும் சாலைகளை வர்த்தகத்திற்கு திறந்துவிடக் கோரி பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணி முதல் நடத்தப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இன்று விடுமுறை நாளாக இருந்தாலும் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் வழக்கம்போல இயங்கின. சாலை ஓரத்தில் நூற்றுக்கணக்கான சில்லறை வியாபாரிகள் தங்ளிடம் உள்ள பழைய புதிய பொருட்களை விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் ஏராளமான பொது மக்கள் குவிந்தனர்.
பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் யாவும் வழக்கம்போல இயங்கின. போராட்ட நாட்களில் விடுபட்ட பணிகளை முடிப்பதற்காக இன்று இயங்குவதாக அவற்றின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.