டெல்லி, ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து கைதாகியுள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த 13 ஆம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் இந்தியன் முஜாஹிதீன், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) ஆகியவற்றைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளது தெரியவந்தது.
இதில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் ஜாமியா நகர் குடியிருப்புப் பகுதியில் நடந்த மோதலில் அடிஃப், சஜித் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் சைஃப், ஜீஸான் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள்தான் ஜெய்ப்பூர், வாரணாசி, அகமதாபாத், பெங்களூர் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் என்று தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ- தயீபா இயக்கத்தின் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டுள்ள இந்தப் பயங்கரவாதிகள் குழுவில் மொத்தம் 13 பேர் இருந்துள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வடக்கு டெல்லியில் பதுங்கிருந்த ஷகீல், நிசார், ஜியா- உர் ரஹ்மான் ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களையும், ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சைஃப், ஜீஸான் ஆகிய இருவரையும் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 6 பயங்கரவாதிகளைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.