வட இந்தியா முழுவதும் பெய்துவரும் மழை, வெள்ளத்திற்கு கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 107 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் பெய்துவரும் பருவ மழைக்கு இதுவரை 77 பேர் பலியாகியுள்ளனர். அங்குள்ள முக்கிய அணைகள், ஏரிகள், குளங்கள் ஆகிய நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளம் அபாயக் கட்டத்தைக் கடந்து கரைபுரண்டு ஓடுகிறது.
தலைநகர் லக்னோ உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின் வெட்டு காரணமாக நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழையினால் மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைச்சரிவுகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.
இதேபோல பஞ்சாப் மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. லூதியானா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கோதுமை வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அதிகபட்சமாக பாட்டியாலாவில் 173.6 மி.மீ., லூதியானாவில் 88 மி.மீ., நங்கல் அணையில் 61.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.