ஒரிசாவில் மழை, வெள்ளத்தால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாநதி உள்ளிட்ட முக்கிய நதிகளில் 22 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உதவிக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஒரிசாவில் உள்ள ஹிராகுட் அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் நீர் முழுவதும் திறந்து விடப்படுவதால், மகாநதி உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகாநதியிலும், அதன் கிளை நதிகளிலும் சுமார் 22 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஹிராகுட் அணையில் இருந்து பாசன வசதி பெறும் அங்குள், கேந்திரபாரா, பூரி, சுட்டாக், ஜெகத்சிங்பூர், ஜாஜ்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஹிராகுட் அணையில் இருந்து இதுவரை திறந்து விடப்பட்டுள்ள 6.93 லட்சம் கனஅடி நீரும் வேளாண் நிலங்களில் புகுந்துள்ளது.
மகாநதியிலும் அதன் கிளை நதிகளிலும் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் வருவாய் மற்றும் பேரழிவு மேலாண்மை அமைச்சர் மன்மோகன் சமால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒரிசாவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ள அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், விரைவில் விமானம் மூலம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவத்தின் முப்படைகளும் மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு அழைக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ராணுவ வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.