அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் நடந்த போராட்டங்களில் பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்த முயன்றவர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துக் காவலர்கள் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது நடந்த மோதலில் 10 பேர் காயமடைந்தனர்.
அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திப் போராடிவரும் ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதி அமைப்பினர் இன்று, கடந்த இரண்டு மாதங்களில் நடந்துள்ள போராட்டங்கள், வன்முறைகள் ஆகியவற்றில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
ஜம்முவில் உள்ள அபினவ் திரையரங்கத்திற்கு அருகில் நடப்பதாகவிருந்த இந்த நிகழ்ச்சிக்குக் காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அபினவ் திரையரங்கு அருகில் மத்திய ரிசர்வ் காவல் படையினர், அதிவிரைவுப் படையினர், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.
அவர்களைக் கலைந்து செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் எச்சரித்தபோது இரண்டு தரப்பிற்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக முதலில் லேசான தடியடி நடத்திய பாதுகாப்புப் படையினர் பின்னர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இவையிரண்டும் பலிக்காததால் வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த மோதலில் 10 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பிற்காகப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.