Publish Date: Fri, 19 Sep 2008 (15:57 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (15:54 IST)
பிரிவினைவாத அமைப்புகள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் பாதைகளை வர்த்தகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அதிக ஆதரவைப் பெற்றுள்ள ஹூரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு மசூதிகளில் தொழுகை முடிந்தவுடன் எல்லா கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அடைக்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதன்படி இன்று மதியம் 12.30 மணிக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. சில வங்கிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவையும் மூடப்பட்டன.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரமுல்லா, சோப்பூர், குப்வாரா, பந்திப்போரா, கந்தெர்பால், சந்தூரா, பட்காம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை முழுவதும் நடக்கவுள்ள முழு அடைப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை விலக்கிக்கொள்ளப்படும் என்று பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Fri, 19 Sep 2008 (15:57 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (15:54 IST)