உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர்களைப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டு உள்ளார்.
அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்ற கருத்து உருவாகியுள்ள நிலையில், அது இந்தியப் பொருளாதாரத்தை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த பிரதமர் மன்மோகன் சிங், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இந்தியாவை பாதிக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன், உலகப் பொருளாதாரத்தின் மாற்றங்களை கூர்ந்து கவனிக்குமாறு அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங், "உலகப் பொருளாதார நிலவரம் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்" என்றார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு இந்தியப் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார் என்றும் ரகுவன்ஸ் பிரசாத் சிங் கூறினார்.