Publish Date: Thu, 18 Sep 2008 (20:05 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரங்கள் குறித்து விசாரித்து வரும் நானாவதி ஆணையம் தனது அறிக்கையின் முதல்பகுதியை சமர்ப்பித்துள்ளது.
விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி நானாவதி தனது அறிக்கையின் முதல் பகுதியை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் இன்று சமர்ப்பித்தார்.
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002 ஆம் ஆண்டு சபர்மதி விரைவு ரயில் பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டதில் பலர் பலியாயினர். இதையடுத்து வெடித்த மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
ரயில் எரிப்புச் சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கே.ஜி.ஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி நானாவதி நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில் நீதிபதி கே.ஜி. ஷா இறந்ததையடுத்து நீதிபதி நானாவதி தலைமையிலான ஆணையத்தில் நீதிபதி மேத்தா நியமிக்கப்பட்டார்.
இந்த ஆணையம் கடந்த 6 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் முதல் பகுதியை இன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் நீதிபதி நானாவதி சமர்ப்பித்தார். அப்போது அம்மாநில உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார்.
முதல் பகுதியில் உள்ள விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.