பயங்கரவாதிகள் வைக்கும் குண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் இயந்திர மனிதனை (ரோபோ) உருவாக்கிய இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி- மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ), அதனை உள்துறை அமைச்சகத்திற்கு விற்பனை செய்யப் பேசி வருகிறது.நமது நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அக்னி, பிருதிவி உள்ளிட்ட ஏவுகணைகளை உருவாக்கிய டி.ஆர்.டிஓ., மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடி குண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோக்களை காஷ்மீரிலும், தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகம் நடக்கும் வட கிழக்கு மாநிலங்களிலும் ஏற்கனவே பயன்படுத்தி சோதனை செய்தது. வெடி குண்டுகளை கண்டுபிடிப்பது மட்டுமின்றி, அதனை செயலிழக்கச் செய்ய ஆட்களை பயன்படுத்தாமல் இந்த ரோபோக்களை பயன்படுத்தி செயலிழக்கச் செய்தனர்.தற்பொழுது, பெங்களுரு, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்புகள் நடந்ததையடுத்து, குண்டுகளை கண்டுபிடித்து அகற்றும் மூன்று விதமான ரோபோக்களை உள்துறை அமைச்சகத்திற்கு வழங்க டி.ஆர்.டி.ஓ. பேசி வருவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் முக்கியமானது, ஆர்.ஓ.வி. என்றழைக்கப்படும் தூரத்திலிருந்தே குண்டுகளை செயலிழக்கச் செய்யும் ரோபோவாகும் (Remotely operated bomb disposal vehicle). சுஜாவ் என்றழைக்கப்படும் மற்றொரு மின்னனுக்கு கருவி குண்டுகளை முடக்கச் செய்யக் கூடியது. சஃபாரி எனும் மற்றொரு ரோபோ, கண்ணி வெடி குண்டுகளை செயலிழக்க வைக்கும் மின்னனு சாதனம் என்று இவ்வமைப்பின் விஞ்ஞானி கூறியுள்ளார்.
ஆர்.ஓ.வி. ஆனது குண்டுகளை கண்டுபிடிப்பதற்கு மட்டுமின்றி, கண்ணி வெடிகள், அணு - உயிரி - ரசாயன வெடிப் பெருட்களையும் கண்டுபிடிக்க வல்லதாகும்.
இந்த மூன்று ரோபோக்களையும் 10 பொறியாளர்களைக் கொண்ட குழு 5 ஆண்டுக்கால தொடர் ஆராய்ச்சியில் வடிவமைத்ததாக அந்த விஞ்ஞானி கூறியுள்ளார். இவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, குண்டுகள் வெடித்து நமது வீரர்கள் பலர் உயிரிழக்கும் நிலை தவிர்க்கப்படுகிறது.
ஆர்.ஓ.வி. நான்கு புகைப்படக் கருவிகள் பொறுத்தப்பட்டது, 550 மீட்டர் தூரத்திலிருந்து சந்தேகத்திற்குரிய எந்தப் பொருளையும் ஆராய்ந்து, வெடி குண்டாக இருப்பின் செயலிழக்கச் செய்யக்கூடியதாகும். இதில் பொறுத்தப்பட்டுள்ள நுண் கதிர் அலை வீசிகள், பெட்டிகளிலும், பைகளிலும் உள்ள பொருட்களையும் துல்லியமாக கண்டறியக் கூடியவை.
இந்த ரோபோ, சாலைகளிலும், வராண்டாக்களிலும் மட்டுமின்றி, படிகளிலும் ஏறிச் செல்லக் கூடியது. எனவே கட்டடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும் இவைகளை பயன்படுத்தலாம் என்று டி.ஆர்.டி.ஓ. கூறுகிறது.