புது டெல்லி உள்படப் பல்வேறு முக்கிய நகரங்களில் அண்மையில் நடந்துள்ள குண்டு வெடிப்புகள், நமது உளவு அமைப்புகளுக்கு இடையில் பெரும் இடைவெளி உள்ளதையே காட்டுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அதிகரித்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ள அவர், நமது நாட்டிற்குள் புதிய தாக்குதல் அமைப்புகளை உருவாக்க பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் கூறினார்.
பயங்கரவாதத் தாக்குதலிகளில் பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டுள்ள அமைப்புகளின் பங்களிப்பை குறைக்க முடியாது என்று குறிப்பிட்ட மன்மோகன் சிங், அந்தத் தாக்குதல்களுக்கு உள்ளூர் சமூக விரோதிகள் அளித்து வரும் உதவிகள் பயங்கரவாத அச்சுறுத்தலுக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்துள்ளது என்றார்.
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக புதிய மத்தியப் புலனாய்வு அமைப்பு ஒன்றை உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை உறுதி செய்ய மறுத்த பிரதமர், "தற்போதுள்ள உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் இடையில் உள்ள ஒருங்கிணைப்பை அதிகரித்தாலே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த முடியும்" என்று ஆலோசனை தெரிவித்தார்.