Publish Date: Wed, 17 Sep 2008 (19:31 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
ஆந்திராவில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்தவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்பீட்டாமைன், மீத்தாம்பீட்டாமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ஈபெட்ரின் போதைப் பொருள் ஆந்திராவில் ஐதராபாத், நெல்லூர் ஆகிய இடங்களில் அதிகளவில் தயாரிக்கப்படுவதாக ஐதராபாத் மண்டல வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருந்துப் பொருள் ஆய்வுக்கழகம் உள்பட 6 இடங்களிலும் நெல்லூரில் உள்ள தொழிற்கூடத்திலும் கடந்த 15, 16-ஆம் தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், ஐதராபாத்தில் 100 கிலோ ஈபெட்ரின், 5 கிலோ அசிடிக் அன்ஹைட்ரைடு, ரூ.52 லட்சம் ரொக்கம் ஆகியவையும், நெல்லூரில் 700 கிலோ ஈபெட்ரின், 850 கிலோ அசிடிக் அன்ஹைட்ரைடு, 20 ஆயிரம் கிலோ சூடோ ஈபெட்ரின் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.40 கோடியாகும்.
இது தொடர்பாகப் பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் தயாரிப்பு, கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக ஐதராபாத், மும்பை, சென்னை நகரங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.