இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அளித்துள்ள விளக்கத்தின்படி, 123 ஒப்பந்தத்தை ஹைட் சட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தும் என்பதும், நமது நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள முக்கியமான உறுதிமொழிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன என்பதும் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது என்பதால், அந்த ஒப்பந்தத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 123 ஒப்பந்தத்தின் தீமைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நமது நாட்டின் வளர்ச்சிக்கு விரோதமான 123 ஒப்பந்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
"இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மீது கடந்த மார்ச் 7 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு தேவையான் அணு சக்தி எரிபொருளை அமெரிக்கா தடையின்றி வழங்கும் என்று உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், ஒருவேளை அமெரிக்கா எரிபொருள் வழங்காவிட்டால், பன்னாட்டு அணு சக்தி முகமையில் உள்ள பிற நாடுகள் இந்தியாவுக்கு தொடர்ந்து எரிபொருள் வழங்கும் என்றாலும், 123 ஒப்பந்தத்தின் கீழ் கூறப்பட்டுள்ள தடையில்லாமல் எரிபொருள் வழங்கும் உறுதிமொழி, அமெரிக்காவின் ஹைட் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்று அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு புஷ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இதனால் மன்மோகன் சிங் நமது நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள உறுதிமொழிகள் பொய்யானவை என்பது வெளிப்படையாகி உள்ளது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது.