வங்கக் கடலில் எல்லை பிரித்துக்கொள்வது தொடர்பாக இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையில் கடந்த மூன்று நாட்களாக நடந்த தொழில்நுட்ப அளவிலான பேச்சு உடன்பாடு ஏதுமின்றி முடிந்தது.
இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஹரியபங்கா ஆற்று முகத்துவாரத்தில் எல்லை பிரிப்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதே பேச்சில் உடன்பாடு ஏற்படாததற்கு காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வங்கக் கடலில் எல்லை பிரித்துக்கொள்வது தொடர்பாக இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையில் தொழில்நுட்ப அளவிலான பேச்சு வங்கதேசத் தலைநகர் டாக்காவில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது. காரசாரமான விவாதங்கள் நிறைந்த இந்தப் பேச்சு இன்று உடன்பாடு ஏதுமின்றி முடிந்தது.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வங்கதேச கூடுதல் அயலுறவுச் செயலர் எம்.ஏ.கே.முகமது செய்தியாளர்களிடம் பேசுகையில், "இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொதுவாக உள்ள ஹரியபங்கா ஆற்றின் நீரோட்டம் தொடர்பாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது." என்றார்.
பேச்சை முடித்துக்கொண்டு வேகமாக வெளியேறிய இந்தியக் குழுவின் தலைவர் பி.ஆர்.ராவ், "நாங்கள் ஒரு அற்புதமான விவாதத்தை நடத்தியுள்ளோம். பல்வேறு கருத்துக்கள், வாய்ப்புகள் குறித்து நாங்கள் பரிசீலனை செய்தோம்." என்றார்.
ஹரியபங்கா ஆற்றின் மத்திய நீரோட்டம் கிழக்குத் திசையில் உள்ளது என்று கூறியுள்ள இந்தியா அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளது. நீரோட்டம் வடக்கு தல்பட்டி பகுதியில்தான் உள்ளது என்று கூறிய வங்கதேசமும் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளது.
இதில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தல்பட்டி தீவு கடல் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் ஹரியபங்கா ஆறு பலமுறை தனது போக்கை மாற்றிக்கொண்டுள்ளதால் பிரச்சனை இன்னும் சிக்கலாகியுள்ளது.