வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் 15 அடி உயரத்திற்கும் மேல் எழுந்த அலைகளால் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கெஜூரி வட்டம், ராம்நகர் வட்டம் ஆகிய பகுதிகளில் 64 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ராம் நகர், சங்கர்பூர், கெஜூரி, ஈக்ரா உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் அனைத்தும் கடல் சீற்றத்தால் சேதமடைந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சேதத்தை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.