நமது நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்துள்ளது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை சிறப்புக் கூட்டத்தில், உள் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் என்ற புதிய பதவியை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து, மத்திய அரசின் மீதும் குறிப்பாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மீதும் கடுமையான விமர்சனங்களை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், ஐ.மு.கூ. உறுப்பினர்களும் முன்வைத்துள்ள நிலையில் இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில் உள் நாட்டுப் பாதுகாப்பிற்காக புதிய அமைச்சர் பதவியைத் தோற்றுவித்து அவருக்கான அமைச்சகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ரயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் டெல்லி குண்டு வெடிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவையை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.