1950 இல் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் கையெழுத்தான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை தற்போதைய அரசியல், வர்த்தகச் சூழலுக்கு ஏற்றவாறு புதுப்பிக்க இரண்டு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.
58 ஆண்டுகளுக்கு முன்பு 1950 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையில் இந்தியாவிற்குச் சாதகமான அம்சங்கள் கூடுதலாக இருக்கிறது என்று நேபாள மாவோயிஸ்ட் கட்சியினர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நேபாளத்தில் மன்னராட்சி ஒழிந்து நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி அமைந்துள்ளதால், இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் கூறுகையில், "இந்தியாவுடனான 1950 ஆம் ஆண்டு வர்த்தகப் போக்குவரத்து உடன்படிக்கையைப் புதுப்பித்து மேம்படுத்த நேபாளம் விருப்பம் தெரிவித்துள்ளது. நாங்களும் அதற்குத் தயாராக உள்ளோம்." என்றார்.
வர்த்தக உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்து மேம்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கான இரு நாடுகளின் அயலுறவுச் செயலர்கள் கூட்டம் விரைவில் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.