இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கையை இந்தியா தொடர்ந்து மீறுகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாற்றியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் ஓடும் சேனாப் ஆற்றிற்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்லிஹார் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை குறைத்துள்ளதன் மூலம், இரு தரப்பிற்கும் இடையில் 1960 இல் மேற்கொள்ளப்பட்ட நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கையை இந்தியா மீறுகிறது என்று குற்றம்சாற்றியுள்ள பாகிஸ்தான், இதுகுறித்து விளக்குவதற்காக நிரந்த இந்தஸ் ஆணையம் அவசரமாகக் கூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து நீர்வரத்து குறைந்துள்ளதால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாசனப் பகுதிகளில் கரீப் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.
நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களைப் பாதுகாக்கவும், நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இழப்பைக் குறைக்கவும் மங்களா அணையில் இருந்து வழக்கத்தை விடக் கூடுதலான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அந்த அணையின் பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரவிருக்கும் ராபி பருவ சாகுபடி பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்நாளிதழ்கள் கூறுகின்றன.
மேலும், சேனாப் ஆற்று நீர்ப் பற்றாக்குறையால் நேர்ந்துள்ள பயிரிழப்பிற்கு இந்தியாதான் நிவாரணம் தர வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், இந்தஸ் நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கையை இந்தியா மீறியுள்ளதாகக் கடந்த இரண்டு மாதங்களில் 6 முறை பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது என்று நிரந்தர இந்தஸ் குழு ஆணையர் சையத் ஜமாத் அலி ஷா கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் கவலை குறித்துத் தெரிவிப்பதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியை பாகிஸ்தான் அயலுறவு அலுவலகம் செப்டம்பர் 5 ஆம் தேதி அழைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பக்லிஹார் அணையைச் சோதனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்தியாவிடம் பாகிஸ்தான் அனுமதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.